
சென்னை, ஆகஸ்ட் 12:
கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியிலும், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) அளித்த அனைத்துத் தேர்தல் வாக்குறுதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று தமிழக நிதியமைச்சர் நா.மரிய வில்சன் சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளார்.
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் 2026-27 ஆம் ஆண்டுக்கான திருத்தியமைக்கப்பட்ட பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர், மாநிலத்தின் தற்போதைய நிதி நிலைமை குறித்தும் அரசின் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்.
பொருளாதார சவால்களும் வெள்ளை அறிக்கையும்:
சமீபத்தில் தற்போதைய அரசால் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், முந்தைய ஆட்சியின் முடிவில் தமிழகத்தின் நேரடி கடன் சுமை ₹10 லட்சம் கோடியாகப் பிரம்மாண்டமாக உயர்ந்துள்ளதாகவும், வருவாய் பற்றாக்குறை ₹78,324 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். 2021-22ல் ₹46,538 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை இந்த அளவுக்கு மோசமடைந்துள்ளதையும், மாநிலத்தின் சொந்த வரி வருவாய் மாநில உள்நாட்டு உற்பத்தியில் 5.93 சதவீதத்தில் இருந்து 5.45 சதவீதமாகக் சரிந்துள்ளதையும் அவர் பேரவையில் பதிவு செய்தார்.
முதல் பட்ஜெட்டிலேயே 125 வாக்குறுதிகள் :
கடுமையான நிதிச்சுமை இருந்தாலும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது" என்று திட்டவட்டமாகக் கூறிய நிதியமைச்சர், த.வெ.க அளித்த 436 தேர்தல் வாக்குறுதிகளில் 125 வாக்குறுதிகள் நடப்பு ஆண்டின் முதல் பட்ஜெட்டிலேயே செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இல்லை என எதிர்க்கட்சிகள் முன்வைத்த விமர்சனங்களுக்கு இதுவே தகுந்த பதில் என்றும் அவர் கூறினார்.
கடன் குறித்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி:
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் அரசு அதிக அளவில் கடன் வாங்கியுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கும் அமைச்சர் புள்ளிவிவரங்களுடன் விளக்கமளித்தார்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ₹19,337 கோடி கடனாகப் பெறப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அது ₹20,881 கோடியாக உயர்ந்துள்ளது உண்மைதான் என்றாலும், மாநில உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாகக் கணக்கிடும்போது கடன் அளவு கடந்த ஆண்டை விட (0.54%) இந்த ஆண்டு (0.51%) குறைந்துள்ளது என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
ஓய்வூதியத் திட்டம்:
கடன் பெறுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில், அரசு ஊழியர்களுக்கான 'உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றும் நிதியமைச்சர் மரிய வில்சன் தனது உரையில் உறுதியளித்தார்.
கடுமையான நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் அதே வேளையில், மக்கள் நலத் திட்டங்களைத் தடையின்றித் தொடர்வதே அரசின் முக்கிய இலக்கு என்பதை இந்த பட்ஜெட் உரை தெளிவுபடுத்தியுள்ளது.